Wednesday, June 24, 2020

பிடித்தவர்களுடன் வாழ்வதற்கும் 
பிடித்தவர்களுக்காக வாழ்வதற்குமே 
படைக்கப்பட்டுள்ளது இவ்வாழ்க்கை.
இதற்கிடையில் தனக்காக வாழ்கிறேன் 
என்பதெல்லாம் அவரவர் மனதில் 
அவரவர் சொல்லிக்கொண்ட பொய். 
        #நா.ஹரிஹரன்#
    நேரம் :4.58 (24.06.2020)

Sunday, June 14, 2020

தொடரும்

பேசித் தீர்த்துவிட்டோம்
பேச இனி ஒன்றுமில்லை 
என்றானபோது,
பேசுவதை நிறுத்திக்கொண்டோம். 

உன்னைப்பற்றி வினவ 
என்னிடம் என்ன விருக்கிறது.? 
என்னைப்பற்றி வினவ 
உன்னிடமும் என்ன விருக்கிறது.? 
என்ற வினாக்குறி எழுந்த

இந்த அதிகாலைக் குளிரில் 
இருவரும் நனைந்துகொண்டு 
பேசஇனி என்னவிருக்கிறது என்பதையே
நினைவுகளால் மொய்த்து கிடக்கிறோம்.

நம் மனப்பெட்டிக்குள் 
இறந்துகிடக்கும் நம் சொற்கள் 
ஒவ்வொன்றிற்கும் 
இப்போது உயிரூட்ட 
நாம் திணறிக்கொண்டிருக்கிறோம். 

அருவியிலிருந்து விழுந்த 
அந்த முதல் நீர்துளியை தொடர்ந்து 
ஆர்பரிக்கும் நீர்வீழ்ச்சியை போல்
நாம் கதைக்க காரணாமாகவிருந்த 
அந்த முதல் வார்த்தையை
இருவரும் தேடியெடுத்து 
இதயத்தில் அமர்த்திகொள்வோம் 
இப்போது வார்த்தைகள் பின் 
தொடரும்... 
                 #நா. ஹரிஹரன்#
           நேரம்:7.09pm(11.06.2020)
            


Thursday, June 11, 2020

எச்சரிக்கை

சற்று எச்சரிக்கையாக இருங்கள் 
அவர்களிடம் ,
கவிதை எழுதுபவர்களோடு, 
டைரி நனைப்பவர்களோடு, 
அனுதினமும் எதையாவது 
கிறுக்குபவர்களோடு,
சற்று தள்ளியே இருங்கள்.

இவையாவும் முடியாவிட்டால் 
கண்ணீரால்  நனைந்த 
அவர்களின் 
காகித கைக்குட்டைகளையாவது
காணாமல் இருங்கள். 

அதில் படிந்திருக்கும் 
உண்மை கறைகளில் 
உங்கள் அழுக்குகளும் 
ஒட்டியிருக்கலாம். 
       #நா. ஹரிஹரன்#
    நேரம்:7.30pm(11.06.2020)
    

Tuesday, June 9, 2020

நிரப்புதலும் நிரம்புதலும்

இப்பேரண்டத்தின் சகலமும் 
வெற்றிடங்களாலும், 
நிரப்புதல்களாலும்,
நிரம்புதல்களாலுமே
நிலைத்து கிடக்கின்றன.

காற்றை கிழித்து 
பறக்கும் ஓர் பறவையின் 
ஒவ்வொரு சிறகு விரிப்பிலும் 
சில வெற்றிடங்களும்
சில நிரம்புதல்களும் 
நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. 

உதிர்ந்த முதிர்ந்த 
இலையின் கிளையினை 
துளிர்கள் நிரப்ப 
துடித்து கொண்டிருக்கின்றன .

நேற்று புயல் சாய்த்துபோட்ட 
ஓர் மரத்தின் வெற்றிடம் 
மனிதர்களால் இன்று 
ஆக்கிரமிக்க பட்டுவிட்டன.

காலியாக்கப்பட்ட 
ஓர் கூண்டில் மறுபடியும்
பறவைகள் திணற திணற 
திணிக்கப்பட்டுவிட்டன. 

பிரியமின்றி பிரியப்பட்ட 
ஓர் காதலனின் (அ) காதலியின் 
கலங்கிய இதயத்தை 
இன்னொருவனாலோ (அ) இன்னொருத்தியாலோ 
பூர்த்தி செய்ய முடியும் 
என்ற நம்பிக்கையில்
பல திருமணங்கள் 
நிகழ்ந்து கொண்டேவிருக்கின்றன.

எல்லோரது வீட்டிலும் 
வெற்றிடமாக்கப்பட்ட 
இறந்தவரின் இடத்தை,
ஓர் குழந்தை -இன்னும் 
நிரப்பிகொண்டேதான் இருக்கிறது.

இந்த வெற்றிட கரைகள் 
என்றும்  மறையாதவை, 
ஆனாலும் இவை 
எவராலோ, 
எதுவாலோ, 
பூசி மொழுகப் படுகின்றன. 

இப்படியாக 
ஏதோவொரு விதத்தில் 
ஏதோவொரு நிலையில் 
நம்முடைய நிரம்புதல்களிலும் 
இன்னொருவரின் அல்லது 
இன்னொன்றின்  நிரப்புதல்களிலுமே
இப்பேரண்டத்தின் சகலமும் 
நிலைத்திருக்கின்றன.

  நேரம்:6.31pm(09.06.2020)
   #நா. ஹரிஹரன்#






Monday, June 8, 2020

வெளியேற்றம்

என்றோ ஒருநாள் நாம் 
பிரியநேரிடலாம் என்பதை 
நானறிவேன் -அதுவரை 
பிரியாமலிருப்போம். 

நம் பிரிதல் 
நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்டதில்லை.
இருந்தும் நாம் 
வெளியேறி கொண்டிருக்கிறோம் 
உன்னிலிருந்து நானும்,
என்னிலிருந்து நீயும். 

இத்துனை நிகழ்வுகளிலும் 
ஒரேயொரு மகிழ்ச்சி என்னவெனில் 
நம் ஆன்மாக்கள் 
காதலெனும் ஆலகாலம் அருந்தியும் 
இன்னும்  முறியாமல் கிடக்கிறது.

      நேரம் :2.56am (9.06.2020)
  #நா. ஹரிஹரன்#

Saturday, June 6, 2020

புரியாத உணர்வுகள்



உனக்கு என்காதல்
புரியவேண்டுமென
எவ்வித அவசியமும் இல்லை
காதல் புரிதலில் இல்லை
நிச்சயமாக இல்லை.

நம் செய்கை அனைத்தையும்
காதலென்ற மாயபிம்பங்களால்
நீ கட்டமைத்துள்ளாய்.
காதலென்பது புரிதலில் இல்லை
நிச்சயமாக இல்லை.
அவை புரியாத உணர்வுகளின் தொகுப்புகள்.

ஓர் குழந்தை எந்தவித
பலனையும் பாராமல்
நமக்கு தருமந்த
ஒற்றைச் சிரிப்பில்,

நாய்க்குட்டி தன் நாக்கு
எச்சிலால் நம் கன்னத்தை
பசைதடவும் அந்த
சிறுபொழுது சிலிர்ப்பில்,

நம்மை கண்டதும்
கீச்சரிக்கும் ஓர் சிட்டுக்குருவியின்
இன்ப இம்சையில்

புரியாத சில உணர்வுகளை
உதிர்க்க முடியாமல்
திணரும் நம் இதயங்களில்

வலிகளை மொழிபெயர்க்க
தெரியாமல் நம் கண்கள்
கண்ணீரை சிந்தவிடும்
அந்த நொடிகளில்,

உணவருந்த முடியாமல்
மனம் கனத்துப்போன
முப்பொழுதுகளில்,

புரிதல் இல்லாமல் இருந்து
புரிதல் வருகையில் பிரிதல் வரும்
அந்த சூன்ய பொழுதுகளில்,
உண்டாகும் புரியாத சில
உணர்ச்சிகளில்,

வார்த்தைகளற்று,
மொழிகளற்று,
உள்ளத்தில் எழுந்த
உணர்வுகளை
கதைக்க முடியாமல்,

இன்னும்  இன்னும் இன்னும்
நிரப்பப்படாமலே கிடக்கும்
பல்வேறு உணர்வுகளில்
நிரம்பிகிடக்கிறது
நமக்கு புரியாத காதல்

     *#நா. ஹரிஹரன்#*

                               நேரம்:8.35 am(07.06.2020)

 ஒரு மனிதனை புரிந்து கொள்ளுதலென்பது பெரிதாக ஒன்றுமில்லை அவனுடைய கயமை தனங்களை  அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலை # நா.ஹரிஹரன்